அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான விரிவானதொரு செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும் : ஜனாதிபதிமாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அம்மாவட்டங்களில் உள்ள சகல கள உத்தியோகத்தர்களினதும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு விரிவான இணைந்த செயற்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் அலுவலகங்களை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்படும் அந்த நிகழ்ச்சித்திட்டம் அடுத்த ஜனவரி மாதம் பொலன்னறுவை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படுமென்றும் அதன் பின்னர் அது நாடளாவிய ரீதியில் விரிவாக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெற்ற பொலன்னறுவை மாவட்ட கள உத்தியோகத்தர்களுடனான ஒரு சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு இந்த நாட்டை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு சகல கள உத்தியோகத்தர்களினதும் உதவி அரசாங்கத்திற்கு அவசியமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளும் நியாயமான, சமநிலையான அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிரதேச செயலாளர் மட்டத்தில் சரியான தகவல்களைப் பெற்று ஒரு வெற்றிகரமானதும் மக்களுக்குத் தேவையானதுமான அபிவிருத்தி செயற்திட்டத்தை நாட்டில் முன்னெடுப்பதற்கு இந்த புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் முடியுமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்றபோது அபிவிருத்தியில் மிகவும் குறைந்த தரத்தில் உள்ள பொலன்னறுவை மாவட்டத்தை அபிவிருத்தி செய்து அங்கு மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கு “எழுச்சிபெறும் பொலன்னறுவை“ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எதிர்வரும் வருடங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த நடவடிக்கைகளை தனிப்பட்ட முறையில் கண்காணிப்பதற்கு அடுத்த ஜனவரி மாதம் முதல் தாம் மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சங்கைக்குரிய அத்துரலியே ரத்தன தேரர், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, மாகாண சபை உறுப்பினர் சம்பத் ஸ்ரீ நிலந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் பொலன்னறுவை மாவட்ட நீதிமன்ற கட்டிடத்திற்கு ஒரு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, அங்கு பணிக்குழாத்தினருடனும் சுமுகமாக கலந்துரையாடினார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்