முஸ்லிம் சேவைக்கு நிரந்தர பணிப்பாளர்! அமைச்சர் மனோ கணேசன் தரும் விளக்கம்


சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுடன் சற்று நேரத்துக்கு முன்னர் தொலைபேசியில் நட்பு ரீதியாக உரையாடினேன். அதன் போது “இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவைக்கு நிரந்தரமான ஒரு பணிப்பாளரை நியமித்து தருவதாக நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நீங்கள் பகிரங்கமாக தெரிவித்திருந்தீர்கள். ஆனால், இதுவரை ஒன்றும் நடக்கவில்லையே” என்று நான் அவரிடம் ஆதங்கப்பட்டேன்.  அதற்கு அவர் அளித்த பதிலை பகிரங்கமாக இங்கு பதிவு செய்கிறேன். .

“அஹ்மத் முனவ்வர் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவின் போது இந்த விடயம் தொடர்பில் பலரும் தெரிவித்தனர். முஸ்லிம் சேவைக்கு நிரந்தரமான ஒரு பணிப்பாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதன் போது சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில் இந்த விடயம் தொடர்பில் நான் உரிய நடவடிக்கைளை மேற்கொள்வதாக தெரிவித்தேன். அத்துடன் இந்த விவகாரம் குறித்த அனைத்து தகவல்களையும் என்னிடம் தரும்படியும் கேட்டுக் கொண்டேன். ஆனால், இதுவரை எவருமே என்னை வந்து சந்திக்கவும் இல்லை. தகவல்களைத் தரவும் இல்லை தொலைபேசியில் கூட உரையாடவும் இல்லை.. இந்த நிலையில் என்னால் எதனைச் செய்ய முடியும்? ஆகக் குறைந்ததது இது சம்பந்தமான தகவல்களையேனும் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு தந்திருக்கலாம் அல்லவா? முஸ்லிம் சேவை பிரச்சினைகளை நான் பெரிதாக அறிந்திருக்கவும் நியாயமில்லைதானே என்றார்.

அவர் கூறுவது நூறு வீதம் உண்மையே கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சராக அவர் இருந்தாலும் முஸ்லிம் சேவையில் உள்ள பிரச்சினைகள், குறைபாடுகள் தொடர்பில் அவர். அறியாதும் இருக்கலாம்தானே?

முஸ்லிம் சேவை தொடர்பில் அந்தக் கூட்டத்தின் போது நண்பர் என்.எம். அமீன் அவர்களும் தனது மன ஆதங்கத்தை  அதிகளவில் வெளியிட்டிருந்தார். அமைச்சர் வழங்கிய உறுதி மொழியின் பின்னர் இந்த விவகாரத்தை அமீன் அவர்களாவது முன்னெடுத்துச் சென்று அமைச்சர் மனோ கணேசன் மூலம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம்  அல்லவா என்பது எனது இன்றைய மனவேதனையும் ஆதங்கமும்.

எவராயினும் சரி மேடைகளில் மடடும் தங்களது சமூக அக்கறையை வெளிக்காட்டுவதில் அர்த்தமில்லை. அது தொடர்பில் செயற்படவும் வேண்டும். காற்றடிக்கும் போதே சரியான முறையில் தூற்றிக் கொள்வது சிறந்தது.  

மேலும் நண்பர் மனோ கணேசன் அவர்கள் ஒரு விடயத்தை முன்னெடுத்தால் அல்லது வாக்குறுதி ஒன்றினை வழங்கினால் அதனை அடையாமல் ஓய்ந்து விடாத மனிதர். இறுதியில் வெற்றி பெற்று விடுவார். அப்படிப்பட்ட ஒரு தமிழ் அமைச்சர், அதுவும் இந்த அரசாங்கத்தில் மிகச் சக்திவாய்ந்த மனிதரான மனோ கணேசன் எமது பிரச்சினையைத் தீர்க்க முன்வந்துள்ள போதும் நம்மவர் அதனைக் கணக்கில் எடுக்காது உள்ளமை யார் குற்றம்?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்