வீரவன்சவுக்கு முன் FCIDயினால் மைத்திரி விசாரிக்கப்பட வேண்டும்…! உதய கம்மன்பில


சிறையில் அடைத்தாலும் தான் உள்ளிட்ட தமது தரப்பினரை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தவோ, தமது வேலைகளை மழுங்கடிக்கவோ முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தம் செய்துக்கொண்டிருந்த போது 2007 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தை கவிழ்க்க மக்கள் விடுதலை முன்னணி முயற்சித்தது.
புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தை கவிழ்ப்பது தேசத்துரோக செயல் என்ற நிலைப்பாட்டை கட்சிக்குள் ஏற்படுத்த முடியாது போனதால், விமல் வீரவன்ச உள்ளிட்டோர் அன்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.
அன்று விமல் விரவங்ச எதிர்நோக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவரது பாவனைக்காக ஜனாதிபதி செயலகம் மேலதிகமாக வாகனம் ஒன்றை வழங்கியிருந்தது.
2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர், அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட வீரவன்ச வாகனத்தை திருப்பி கொடுக்க ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றார்.
பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விமல் வீரவங்சவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டால், பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய இந்த வாகனத்தை வைத்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இது குறித்து நான் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் கேட்டேன். அவரும் அதனை உறுதிப்படுத்தினார். உறுதிப்படுத்தி சத்தியக்கடித்தை வேண்டுமானாலும் தருவதாகவும் அவர் கூறினார்.
இந்த வாகனம் தொடர்பாக விசாரணை நடத்த விமல் வீரவங்ச இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பாதுகாப்புச் சபை எடுத்த தீர்மானத்திற்கு அமைய மேலதிகமாக வாகனம் ஒன்றை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியே முடிவு செய்துள்ளார்.
அந்த வாகனம் சட்டரீதியாக வழங்கப்பட்டது. தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற காரணங்கள் இல்லாவிட்டாலும் அமைச்சர்கள் பல வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு எமது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே அதிகமான வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
வழங்கப்பட்ட எண்ணிக்கையை விட ஒரு வாகனத்தை அதிகமாக பயன்படுத்துவது குற்றம் என நிதி மோசடி விசாரணைப் பிரிவு கருதி விசாரிக்குமாயின் முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே விசாரணைக்கு அழைக்க வேண்டும் எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்