முஸ்லிம்கள் விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் மௌனிகளாக உள்ளனர் – உலமா கட்சி


S.Ashraff Khan

கடந்த ஆட்சியில் வட மாகாண முஸ்லிம்களின் வாழ்விடங்களை காடுகளுக்கு சொந்தமானது என தவறாக இணைக்கப்பட்ட வர்த்தமாணி அறிவித்தலை இரண்டு வருடங்களாகியும் ரத்துச்செய்ய முடியாத அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம் சமூகம் எவ்வாறு தம் உரிமைகளை பெறப்போகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பினார்.

கட்சி தலைமையகத்தில் இன்று (11) நடைபெற்ற ஆதரவாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

கடந்த அரசில் முஸ்லிம்களுக்கெதிராக பல சம்பவங்கள் நடந்தன என்று சொல்லியே இந்த அரசுக்கு முஸ்லிம்கள் 95 வீதம் வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வந்தனர். அப்படியிருந்தும் முஸ்லிம்களுக்கெதிரான எந்தவொரு தவறுக்கும் இது வரை பரிகாரம் தேடப்படவில்லை. அது மட்டுமல்லாமல் வட மாகாணத்தில் அகதிகளான முஸ்லிம்களை மேலும் அகதிகளாக்குவதற்காக முஸ்லிம்களின் வாழ்விடங்களை மேலும் காடுகளாக்கும்; புதிய வர்த்தமாணி வெளியிடுவது பற்றி ஜனாதிபதி கருத்துக்கூறியுள்ளமை நம்பி வாக்களித்த முஸ்லிம்களுக்கு செய்யும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகமாகும்.

2012ம் ஆண்டு அமைச்சர் யாப்பாவினால் முஸ்லிம்கள் 90ம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த பரதேசங்களை அமைச்சர் ரிசாத் பதியுதீனிடமோ, பிரதேச முஸ்லிம்களிடமோ ஆலோசிக்காமல் அவை காடு என வர்த்தமாணி அறிவித்தல் விடுக்கப்பட்டது. இத்தவறை திருத்தும்படி தற்போதைய அரசிடம் பெரும்பாலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் கட்சிகள், அமைப்புக்கள் கோரிக்கைள் பல விடுத்தும் இது பற்றி ஜனாதிபதியும், பிரதமரும் கொஞ்சமும் கணக்கில் எடுக்காமல் வாய் மூடி மௌனிகளாக இருப்பதன் மூலம் இவ்விருவரும் முஸ்லிம் விரோத இனவாதிகளின் கைப்பொம்மையாகி விட்டனரா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு சாதாரண வர்த்தமாணி அறிவிப்பை ரத்துச்செய்ய முடியாத ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் முஸ்லிம்கள் எப்படி தமது உரிமையை பெறலாம் என எதிர் பார்க்க முடியும் என்ற கேள்வியை முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். இந்த லட்சணத்தில் மௌலவி ஆசிரிய நியமனம் விடயத்தில் வர்த்தமாணிக்கு மாற்றமாக நியமனம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என சில ஆசிரிய சங்கங்கள் புறுடா விட்டு சமூகத்தை தம் பங்கிற்கு ஏமாற்றுகிறார்கள்.

விலபத்து விடயம் மிக சாதாரண விடயமாகும். ஜனாதிபதியும் பிரதமரும் மனம் வைத்தால் ஒரே இரவில் பழைய வர்த்தமாணியை ரத்து செய்ய முடியும். அதனைச்செய்வதற்கு முடியாத கையாலாகா அரசுக்குத்தான் நாம் கூஜா தூக்குகிறோம். அங்கு மீள் குடியேறியுள்ள முஸ்லிம்கள் சுயமாக காடு அழித்து குடியேறவில்லை என்பது நூறு வீதம் நிரூபிக்கப்பட்டும் 2012 வர்த்தமாணி அறிவித்தலை ரத்து செய்ய முடியவில்லை என்றால் மீண்டும் ராஜபக்ஷாக்களை ஆட்சிக்கு கொண்டு வந்துதான் அதனை ரத்துச்செய்ய வேண்டுமா? போகிற போக்கில் இதனைத்தான் முஸ்லிம் சமூகம் செய்ய வேண்டியுள்ளது. இந்த அரசு கடந்த அரசின் எந்தத்தவறையும் திருத்த முணையாமல் மேலும் பல அழுத்தங்களை முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க முனைவதை பார்க்கும் போது மஹிந்த ஆட்சி எவ்வளவோ மேல் என தெரிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்