பண்ணையாளர்கள் மீது பௌத்த தேரர்கள் தாக்குதல்


மட்டக்களப்பு எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது, மூன்று தேரர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அப்பகுதியில் அத்துமீறி விஹாரை அமைத்திருக்கும் பௌத்த தேரர்கள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துமீறி அமைக்கப்பட்ட விஹாரையின் விஹாராதிபதியும் அவருடன் வருகைதந்த ஏனைய இரு பௌத்த பிக்குகளும் சேர்ந்து குறித்த பகுதியில் மாடுகளை மேய்க்கக் கூடாதென கூறி, வந்தாறுமூலை மற்றும் சித்தாண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று பண்ணையாளர்களை தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளான குமாரசாமி பேரின்பம் என்பவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம், மாகாண விவசாய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வந்த நிலையில், அதனை நிறுத்துவதற்கான தடை உத்தரவை நீதிமன்றத்தின் ஊடாக மகாவலி அபிவிருத்தி சபை பிறப்பித்துள்ள போதும் குறித்த பகுதியில் அத்துமீறி அமைக்கப்பட்ட விஹாரையொன்றும் அதனைச் சுற்றி சில சிங்கள குடியேற்றங்களும் இன்னும் காணப்படுவதாக, அப்பகுதியில் தங்களது மாடுகளை மேய்க்கும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட பிறிதொரு காணியை கையகப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அண்மை காலமாக செயற்பட்ட விதம், தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்